ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 7-ம் தேதி நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இதன் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் ரஜினி. அதன் புகைப்படங்களை லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட, 'தர்பார்' படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏனென்றால், சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கவுள்ளார்.
தற்போது இசை வெளியீட்டு விழாவினை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைக்கலாமா என்ற ஆலோசனை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலிருந்து முன்னணி நாயகர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளது படக்குழு.
தமிழில் ரஜினி நெருங்கிய நண்பரான கமலை கலந்து கொள்ள வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். 'கமல் 60' விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதால், 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் கமல கலந்து கொள்வார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்