'துப்பறிவாளன் 2' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா, யோகி பாபு, ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆக்ஷன்'. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கணிசமாக வசூல் செய்து வருகிறது.
'ஆக்ஷன்' படத்தைத் தொடர்ந்து 'சக்ரா' என்னும் படத்தில் நடித்துள்ளார் விஷால். அடுத்தாண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் என்.எஸ் ஆனந்தன் இயக்கி வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷாலே தயாரித்தும் வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பிரசன்னா, கெளதமி, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதையும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்து வருகிறது.
'சக்ரா', 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஆனந்த் ஷங்கர். 'அரிமா நம்பி', 'இருமுகன்' மற்றும் 'நோட்டா' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.