தமிழ் சினிமா

பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு: இன்று ரிலீஸானது ‘சங்கத்தமிழன்’

செய்திப்பிரிவு

‘சங்கத்தமிழன்’ வெளியீட்டுப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 16) படம் ரிலீஸாகியுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நாசர், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

முதலில் தீபாவளி வெளியீடாக இருந்த இந்தப் படம், அதிலிருந்து பின்வாங்கி நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ், சென்னை, கோவை, திருநெல்வேலி என தனித்தனியாக விநியோக உரிமைகளை விற்று, விளம்பரப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தியது. ஆனால், அறிவித்தபடி நேற்று இந்தப் படம் வெளியாகவில்லை.

‘வீரம்’ படத்தின்போது வரிச்சலுகை பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் 7ஜி சிவா என்பவர் புகார் அளித்தார். சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளும் ஒன்றிணைந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் 3 நாட்களிலும் பேச்சுவார்த்தை இழுபறியாக, ஒருவழியாக நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

SCROLL FOR NEXT