தமிழ் சினிமா

எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

செய்திப்பிரிவு

ஜெ. பயோபிக்கான 'தலைவி'யில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் அரவிந்த்சாமி. இதற்காக தன் கெட்டப்பை மாற்றியுள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

இதில் எம்.ஜி.ஆராக நடிக்க ஒப்பந்தமானார் அரவிந்த்சாமி. எம்.ஜி.ஆருடைய கெட்டப் சரியாக கொண்டுவர பல்வேறு லுக் டெஸ்ட்களும் நடைபெற்றது. இறுதியில் எம்.ஜி.ஆருடைய லுக்கை முடிவு செய்துவிட்டது படக்குழு. இதற்காக தன் கெட்டப்பையும் மாற்றியுள்ளார் அரவிந்த்சாமி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தலைவி' படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT