'தலைவி' படத்திற்காக தமிழ் கற்பது கடினமாக உள்ளது. இதனால் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன் என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை சுமார் 2 ஆண்டுகளாக, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து உருவாக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.
இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 10-ம் தேதி தொடங்கியது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இதில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கங்கணா ரணாவத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். யார் எந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
'ஹங்கர் கேம்ஸ்', 'கேப்டன் மார்வல்', 'ப்ளேட் ரன்னர் 2049' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், இதில் கங்கணாவின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, பரதநாட்டியக் கலையைக் கற்றுள்ளார் கங்கணா.
'தலைவி' படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கணா ரணாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.