தமிழ் சினிமா

நடிகர் சங்க சர்ச்சை: ஐசரி கணேஷை கடுமையாகச் சாடிய பூச்சி முருகன்

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத்துக்குத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டது தொடர்பாக ஐசரி கணேஷை கடுமையாகச் சாடியுள்ளார் பூச்சி முருகன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக நாசர், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று குறிப்பிட்டனர்.

நடிகர் சங்கத்தில் விஷால் அணியில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவர் பூச்சி முருகன். தற்போது தனது ஃபேஸ்புக் பதிவில் எதிரணியைச் சேர்ந்த ஐசரி கணேஷை கடுமையாகச் சாடியுள்ளார் பூச்சி முருகன். இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“நீதியையே விலைபேசி வாங்கிட முயன்றவர் ஐசரி கணேஷ். ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டால் அகிலமே தன் காலடியில் என்று நினைப்பவர்கள் அழிந்துதான் போவார்கள் என்பதற்கு, கடந்த காலங்களிலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன.

அவற்றை ஐசரி கணேஷ் அறிந்து கொள்வது அவசியம். அவரின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தந்தை பெரியார் இந்த வார்த்தைகளை அவருக்காகத்தான் சொல்லி இருக்கிறாரோ என்ற எண்ணம் வருகிறது. ‘மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமம்.’ “

இவ்வாறு பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT