சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ மற்றும் ‘தடம்’ என நான்கு படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. செல்வராகவன் மற்றும் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள இவர், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் கஷ்யப்புக்கு டப்பிங் பேசியுள்ளார்.
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் மகிழ் திருமேனி என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு வில்லனாக மகிழ் திருமேனி நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்தப் படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான பிரச்சினை பேசப்படவுள்ளது. இதில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், ‘டெடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி என அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் ஆர்யா. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ஜோடியாக அவருடைய காதல் மனைவி சயீஷா நடித்துள்ளார்.
சதீஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் மகிழ் திருமேனி. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.