இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாக கூட்டாக அறிவித்தனர்.
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை.
இந்நிலையில் இன்று இயக்குநர் விஜய் - அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண பத்திரிக்கையை ஒவ்வொருவருக்கும் அவர்களது இருக்கைக்கே கொண்டு வந்து கொடுத்தனர்.
அப்போது இயக்குநர் விஜய் கூறியது, "என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிக்கையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலையில் எங்களது வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
எங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. எப்படி இந்த செய்திகள் எல்லாம் வெளிவருகின்றன என்று தெரியவில்லை. என்னுடைய நெருங்கிய தோழியை தான் நான் திருமணம் செய்ய இருக்கிறேன். நாங்கள் நண்பர்களாக இருக்கும் போது, காதலிக்கிறார்கள் என்று செய்தி எல்லாம் வந்தது. எங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றது கடந்த 8 மாதமாக தான். திருமணத்திற்கு பிறகு தேன்நிலவு குறித்து எல்லாம் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு எனது திருமணம் மற்றும் 'சைவம்' படம் இரண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்" என்றார்.
நடிகை அமலா பால் கூறியது, "திருமணத்திற்கு பிறகு கமர்ஷியல் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பது குறிப்பது அந்த சமயத்தில் முடிவெடுப்பேன். திருமனத்திற்கு பிறகு முழுக்க குடும்ப வாழ்க்கையை மட்டுமே கவனிப்பேன்" என்றார்.