‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பரிசு எதுவும் பெறாமல் இரண்டாவது முறையாக வெற்றியைத் தவற விட்டுள்ளார் கெளதம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் அடங்குவர்.
இந்த நிகழ்ச்சியின் சீனியர் பிரிவின் 7-வது சீஸன் இறுதிப்போட்டி, கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.
இதில், முருகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் பரிசு விக்ரமுக்கும் மூன்றாம் பரிசு சாம் விஷால் மற்றும் புண்யா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்றவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடும், அடுத்தடுத்த பரிசுகள் பெற்றவர்களுக்கு வைர நகைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
ஆனால், கடைசி இடம் பிடித்த கெளதமுக்கு எந்தப் பரிசும் வழங்கப்படவில்லை. ஆறுதலுக்காகக்கூட கெளதமுக்கு எதுவும் வழங்கப்படாதது, அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் இந்த ‘சூப்பர் சிங்கர்’ மேடை கெளதமுக்குப் புதிது கிடையாது. ஏற்கெனவே 2012-ம் ஆண்டு ஒளிபரப்பான ஜூனியர் பிரிவின் 3-வது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு, இறுதிப் போட்டியிலும் பங்கேற்றவர்தான் கெளதம்.
கெளதம், ஆஜித், யாழினி, பிரகதி, சுகன்யா ஆகிய 5 பேரும் கலந்துகொண்ட ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 3’ நிகழ்ச்சியில், முதல் பரிசு ஆஜித்துக்கும், இரண்டாம் பரிசு பிரகதிக்கும், மூன்றாம் பரிசு யாழினிக்கும் வழங்கப்பட்டது. கெளதம் மற்றும் சுகன்யா இருவருக்கும் தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
அந்த சீஸனில் அவர் பாடிய ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் (‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றது), இன்றளவும் கேட்டு உருகக்கூடிய பாடலாக அமைந்தது. அவர் பாடியதைப் பார்த்து நடுவராக இருந்த அருணா சாய்ராம், கண்ணீர் விட்டு அழுதார். அதுமட்டுமல்ல, அந்தப் பாடலுக்கு வீணை வாசித்த ராஜேஷ் வைத்யா, கெளதம் பாடிய விதத்தைப் பார்த்து ஒருகட்டத்தில் வீணை வாசிக்க முடியாமல் தடுமாறினார்.
‘சூப்பர் சிங்கர் 7’-லும் சிறப்பாகப் பாடல்களைப் பாடியுள்ளார் கெளதம். ‘புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘ஆலுமா டோலுமா’, ‘கண்ணான கண்ணே’, ‘காதல் ரோஜாவே’, ‘மாம்பழம் விக்கிற கண்ணம்மா’, ‘லாலா கடை சாந்தி’, ‘தங்கத்தாமரை மகளே’, ‘என்னடி ராக்கம்மா’, ‘ஆளாப்போறான் தமிழன்’ என நிறைய பாடல்களை ரசிக்கும்படி பாடியுள்ளார். குறிப்பாக, ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, ‘சொர்க்கம் மதுவிலே’ பாடலைப் பாடி எல்லோரையும் அசத்தினார் கெளதம்.
அரையிறுதிப் போட்டியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கெளதம், வைல்டு கார்டு சுற்றின் மூலம் மறுபடியும் நிகழ்ச்சிக்குள் வந்து இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.