அயோத்தி தீர்ப்பினை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
நீண்ட காலமாக நிலுவையிலிருந்த அயோத்தி நில விவகார வழக்கில், உச்ச நீதிமன்றம் நவம்பர் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
அதற்குப் பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பா.இரஞ்சித் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான தன் ட்விட்டர் பதிவில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் ஜனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
தான் இயக்கவிருந்த இந்திப் படத்தின் பணிகள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், தமிழில் ஆர்யா, தினேஷ், கலையரசன் நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார் பா.இரஞ்சித். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.