தமிழ் சினிமா

சூர்யாவின் 'சூரரைப் போற்று' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியாவதாக இருந்த இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியீட்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடிவு பெறாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு மதுரைக்கு அருகே நடத்தியுள்ளது படக்குழு. மேலும், ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியையும் வட இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து குனித் மோங்காவும் தயாரித்து வருகிறார்.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா.

SCROLL FOR NEXT