‘சிறந்த இடமாக நம் தேசத்தை மாற்றுவோம்' என அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை ரகுல் ப்ரீத்சிங் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 8) தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
அதற்குப் பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத்சிங் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்ன ஒரு அற்புதமான நாள். எல்லோரும் ஒன்றாக நின்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம். கடந்த காலத்தில் பல விஷயங்கள் தொலைந்துவிட்டன. இனிமேல் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து, செழித்து வாழ்ந்து, வாழ்வதற்கு இன்னமும் சிறந்த இடமாக நம் தேசத்தை மாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.