தமிழ் சினிமா

பலரின் கூட்டு முயற்சி சினிமா, தாறுமாறாக விமர்சிக்கக்கூடாது: எஸ்.வி.சேகர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சி. அதை, தாறுமாறாக விமர்சிக்கக்கூடாது என எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீபிரியங்கா, ஹரீஷ் குமார், சீமான், முத்துராமன், ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்துக்கு, போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை உண்டானது.

இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது 125-க்கும் அதிகமான திரையரங்குகளில் 'மிக மிக அவசரம்' வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில், படக்குழுவினரோடு ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் எஸ்.வி.சேகர் பேசியபோது, "தயாரிப்பாளர் சங்கத்தில் அரசாங்கம் நியமித்துள்ள ஆலோசனைக்குழு கமிட்டியாகத்தான் நாங்கள் இருக்கிறோம். 'மிக மிக அவசரம்' படம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் வேறு படங்கள் உள்ளே நுழைந்துவிட்டன.

நாம் விநியோகஸ்தர்களையும், திரையரங்க நிர்வாகிகளையும் குறை சொல்வதில் பயன் இல்லை. காரணம், தயாரிப்பாளர்களுக்குள் இருந்த சுய கட்டுப்பாடு மீறப்பட்டுள்ளது.. அப்படி ஒரு நடைமுறை முதலில் இருந்தது. ஆனால், திரையுலகில் திடீரென ஏற்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்தான், தற்போது இப்படி ஒரு கமிட்டி அரசாங்கத்தின் மூலம் வரும்படியாகச் சூழல் ஏற்பட்டுவிட்டது..

கடந்த வருடம் மட்டும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 480 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிஸ்டம் சரியாக இருந்தால், திரையுலகம் சரியாக இயங்கும். சுரேஷ் காமாட்சி சமூக நோக்கில் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கருத்துடன் கமர்ஷியல் அம்சங்களும் இருக்கின்றன. இந்தப் படம் வெளியான பின்பு அநேகமாக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பெண் காவலர்களுக்காக மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்வார்கள் என நிச்சயம் நம்புகிறேன்..

சாலைகளில் ஒருவன் சிறுநீர் கழிக்கிறான் என்றால், அது அவனது குற்றமல்ல. அரசாங்கத்தின் தவறுதான். இது அனைத்துக் காவல்துறையினரும் பார்க்க வேண்டிய படம். அதுமட்டுமல்ல, இந்தப் படத்துக்கு அரசாங்கம் வரிவிலக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும், இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சி. அதை, தாறுமாறாக விமர்சிக்கக்கூடாது. படங்களை மோசமாக விமர்சித்த ஒருவர், படம் எடுத்தபோது அந்தப் படம் ஒரு காட்சி கூட ஓடவில்லை. காரணம், விமர்சனம் செய்வது என்பது வேறு. படம் எடுப்பது என்பது வேறு” என்றார்.

SCROLL FOR NEXT