தமிழ் சினிமா

'ஹேராம்' எடுக்கும்போதே அரசியல் ஆசை இருந்தது: கமல்

செய்திப்பிரிவு

'ஹேராம்' எடுக்கும்போதே அரசியல் ஆசை இருந்தது என்று சென்னையில் நடைபெற்ற 'ஹேராம்' திரையிடலில் கமல் குறிப்பிட்டார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேற்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு நேற்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

இன்று (நவம்பர் 8) சென்னையில் உள்ள புதிய ராஜ்கமல பிலிம்ஸ் தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் ரஜினி - கமல் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 3:30 மணியளவில் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக கமல் இயக்கத்தில் வெளியான 'ஹேராம்' படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அந்த திரையிடலில் கலந்து கொண்ட திரையுலகினர் மற்றும் ஊடகத்தினரின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார் கமல்.

அப்போது கமல் பேசும் போது, "வியாபாரம், தொழில் என்பதைத் தாண்டி என் வாழ்க்கையில் அடிநாதம் என்ன என்பதை நானே புரிந்து கொள்ள ஆரம்பித்த நேரம். இன்று நான் நடந்து கொண்டிருக்கும் பாதையின் ஆரம்பம் இங்கே இருந்து தான் வந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து விடுவீர்கள்.

இந்தப் படம் எடுத்தவன் இந்தத் தேதியில் இதற்கு முன்பே இந்த இடத்திலிருந்திருக்க வேண்டும். தாமதமாகத் தான் வந்திருக்கிறேன். அதற்கு வேண்டுமானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், இந்தப் படம் தாமதமாக வந்திருக்கக் கூடாது. 2000-ம் ஆண்டில் வந்ததே தாமதம் தான். அதைச் செய்து முடித்தோம் என்ற பெருமையை விட, கடமையாகச் செய்தோம் என்பதே உண்மை.

'ஹேராம்' எடுக்கும்போது அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. ஆனால், அரசியல் ஆசை இருந்தது. 'ஹேராம்' படம் பார்த்தாலே அது புரியும்” என்று பேசினார் கமல்ஹாசன்

SCROLL FOR NEXT