உன் போராட்டம் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என சீமானுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று (நவம்பர் 8) தனது 53-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால், அவருக்கு நேரடியாகவும் இணையம் வழியாகவும் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, சீமானுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது பதிவில், "உனக்கான காலம் வெகுதூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும்.
தமிழ் இனத்துக்கான உன் போராட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போராட்டத்தின் முடிவும் தமிழகத்திற்குச் சாதகமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.