அரசியல் வளர்ச்சி, அயோத்தி தீர்ப்பு, இந்தியப் பொருளாதாரம், தமிழக அரசியலில் வெற்றிடம் என பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி ஆவேசமாகப் பேசினார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. இதில் ரஜினி - கமல் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது "எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. திருவள்ளுவர் விஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் ரஜினி. இந்தச் சமயத்தில் சில ஊடகங்கள் மட்டுமே இருந்துள்ளன.
இந்தக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ரஜினி வீட்டு வாசலில் நிருபர்கள் கூடினர். இதனால், மீண்டும் ரஜினி வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
என் மீது காவி சாயம் பூச முயற்சி என்று முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறீர்களே..
முதல் முறையாக இல்லையே. எப்போதுமே வெளிப்படையாகத் தானே பேசி வருகிறேன்.
உங்கள் அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காகச் செய்கிறார்கள் என நினைக்கிறீர்களா?
இல்லை. இது அரசியலில் சகஜம். அதுவும் இந்தக் காலத்து அரசியலில் சகஜம். சிலர் பூச முயல்கிறார்கள். கண்டிப்பாக அது நடக்காது என்பதைத்தான் குறிப்பிட்டேன்.
திருவள்ளுவருக்குச் செய்யப்பட்டது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என நினைக்கிறீர்களா?
இல்லை. அதைத் தற்செயலாகச் செய்தார்கள். பாஜகவின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார்கள். ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எல்லாம் அப்படி பண்ண வேண்டும் எனச் சொல்லவில்லை. (கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே) எவ்வளவோ விஷயங்கள் பேச வேண்டியது, சர்ச்சையாக்க வேண்டியதிருக்கிறது. நீங்கள்தான் இதைப் பெரிதாக்கி விட்டீர்கள்.
அயோத்தி தீர்ப்பு வரவுள்ளதே...
நல்ல கேள்வி... எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும், மக்கள் அமைதிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ரஜினியின் மீது பாஜக சாயம் பூச நினைப்பவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன?
ஏற்கெனவே சொல்லிவிட்டேன். பத்திரிகைகள்தான் என்னை பாஜக ஆளாகக் காட்ட முயல்கின்றன. அதில் உண்மையில்லை.
மீடியாவைச் சொல்கிறீர்களா அல்லது பாஜகவினரைச் சொல்கிறீர்களா?
இல்லை. சில பேர் தான்.
ஆனால், பாஜகவில் சேரப் போகிறீர்கள் என்று செய்தி வந்து கொண்டே இருக்கிறதே?
யார் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் சந்தோஷப்படுவார்கள். அதை முடிவெடுக்க வேண்டியது நான். அதற்காக என்னையே நம்பி இருக்கிறார்கள் எனச் சொல்வது தவறு.
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. அந்த நேரத்தில் தான் கைது செய்யப்பட்டார் என்று சொல்கிறார்களே..
அதைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. தெரியாமல் எப்போதுமே நான் பேச மாட்டேன்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து உங்கள் பார்வை என்ன?
பொருளாதார வளர்ச்சி ரொம்ப மெதுவாக உள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ செய்ய வேண்டும்.
அரசியலுக்கு வருகிறேன் என்றாலும் தொடர்ச்சியாகப் படங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள். அரசியலுக்கு வந்துவிட்டாலும் தொடர்ந்து கூட நடிப்பீர்களா?
தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை தொடர்ச்சியாகப் படங்களில் நடிப்பேன். எம்ஜிஆர் சார் கட்சி தொடங்கி முதல்வராகும் வரை நடித்தார் என்று தமிழருவி மணியன் ஐயா சொல்லியிருக்கார்.
தமிழகத்தில் வெற்றிடம் இன்னும் இருக்கிறதா?
தமிழகத்தில் இன்னும் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது.