கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் போலீஸாக நடிக்கிறார் பாபி சிம்ஹா எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. 23 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசனுக்கு நேற்று (நவம்பர் 7) பிறந்த நாள் என்பதால், அதை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, கமலைத் தவிர மற்றவர்களின் காட்சிகளைத் தற்போது படமாக்கி வருகிறார் ஷங்கர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் பாபி சிம்ஹா தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதன்மூலம், பாபி சிம்ஹாவும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியானது.
அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நெடுமுடி வேணு போலீஸாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.