விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் - சீசன் 7’ இறுதிச்சுற்றை நெருங்கியுள்ளது. கோவை கொடீசியா வர்த்தக வளாகத்தில் வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நேரடி நிகழ்ச்சியில், இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரியவரும்.
நிகழ்ச்சி குறித்து சேனல் தரப்பில் கூறியதாவது:
2006-ல் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இசைத் துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது. இதன் சீசன்-7 நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு சுற்றுகளைக் கடந்து இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் புண்யா, விக்ரம், சாம் விஷால், கவுதம், முருகன் ஆகியோர் பிரம்மாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்தனர். நடுவர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகியோர் அவர்களை ஊக்கப்படுத்தி வந்தனர்.
இந்த முறை ‘கிராண்ட் ஃபினாலே லைவ்’ பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புத நடுவர்கள் என பலரும் இதில் இசை விருந்து அளிக்க உள்ளனர். இன்னும் பல பாடல்கள், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேற உள்ளன.
பிரம்மாண்ட இசை போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொள்கிறார். சீசன் 7-ல் வெற்றிபெறும் போட்டியாளர் இவரது இசையமைப்பில் பாடும் வாய்ப்பை பெறுகிறார். ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடும் அவருக்கு பரிசாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.