மஹா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கியுள்ள ‘கோகுலத்தில் சீதை’ தொடர் மூலமாக நெடுந்தொடர் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார் நடன இயக்குநர் நந்தா. இவர் இந்த சேனலின் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வழியே கவனம் ஈர்த்தவர். தொடரில் நடிக்கும் அனுபவம் குறித்து அவருடன் பேசியதில் இருந்து...
நடன இயக்குநர் நந்தாவுக்கு திடீரென நடிப்பு ஆசை வந்தது ஏன்?
சின்னத்திரைக்குள் வருவதற்கு முன்பு ‘புகைப்படம்’ என்ற படத்தில் நடித்தேன். ‘நமக்கு சுத்தமா நடிப்பு வராது’ என்று அப்போதான் புரிஞ்சிக்கிட்டேன். சரி, ‘மாற்றி யோசி’ன்னு, நடனத்தை கெட்டியாக பிடிச்சிக்கிட்டேன். அதில் இப்போ முக்கால்வாசி வெற்றியும் பெற்றதாக நினைக்கிறேன். ஜீ தமிழ் சேனலுக்கு வர்றதுக்கு முன்பு விஜய் டிவியில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கேன். இங்கு வந்த பிறகு‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சி எனக்கு தனி அடையாளம் கொடுத்தது.
அந்த நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் போது நடன விஷயங்களை நடித்துக் காண்பிக்க ஆரம்பிச்சேன். ‘நீங்களே நடிக்கலாமே?’ என்று அப்போது பேச்சு அடிபடத் தொடங்கியது. சேனல் தரப்பினருக்கும் இந்த எண்ணம் வர, ‘கோகுலத்தில் சீதை’ தொடரில் நீங்களே நடிச்சிடுங்க என்று சொல்லி, அந்த பெரிய பொறுப்பை தூக்கி என் தலையில் வச்சுட்டாங்க.
ஒரு நடன இயக்குநருக்கு சினிமா, சின்னத்திரை இரண்டில் சவாலானது எது?
ரெண்டுமே முழுக்க முழுக்க வித்தியாசமான களம். சினிமாவில் பணிபுரியும்போது ஒரு பாடல் என்ன சூழலில் உருவாகிறது, அதில் யார் நடிக்கிறாங்க, அது என்னமாதிரி பாடல்.. இப்படி பல விஷயங்கள் இருக்கு. இதற்கெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
இப்படி பல அம்சங்கள் இருந்தாலும், கேமராவுக்குள் என்ன வருதோ.. அதுதான்! டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியை பொருத்தவரை, ஒரே ஷாட்டில் எல்லா விஷயத்திலும் ஸ்கோர் செய்து, பெயர் வாங்க வேண்டும். சின்னத்திரையில் நடனத்தில் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டமான வேலை. அதிலும், நடனமே ஆடத் தெரியாமல் வருபவர்களைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி தயார் செய்வது இருக்கே.. அது சவாலான வேலை. ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் எனக்கு அந்த அனுபவம் ரொம்பவே உண்டு.
திரைப்படங்களுக்கும் நடன இயக்குநராக பணிபுரிகிறீர்களாமே?
சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் வரை 12 படங்களுக்கு மேல வேலை செய்திருக்கேன். இப்போ ஜி.வி.பிரகாஷ் படம், அடுத்து மலையாளத்தில் ஒரு படம் என அந்த பணியும் சிறப்பாகவே நகர்கிறது.
‘கோகுலத்தில் சீதை’ தொடரின் அனுபவம் குறித்து..
கடந்த 3 மாதங்களாக அந்த தொடரின் படப்பிடிப்பில்தான் இருக்கேன். தொடர் குறித்த விளம்பரம் முதல், ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள சில அத்தியாயங்கள் வரை நல்ல பாராட்டுகள் கிடைச்சிக்கிட்டே இருக்கு.
உங்கள் அடுத்தகட்ட பயணம் பற்றி..
நடன இயக்குநராக இருந்து, ஒரு கதாநாயகன், நாயகி அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவரை வேலை வாங்குவது ஒரு வகை. இப்போ நானே கேமரா முன்னால் அந்த வேலையை செய்கிறேன். என் விஷயத்தில் மீண்டும் நடிகன் ஆனதே ஆச்சரியம்தான். தொடர்ந்து இதில் கிடைக்கும் நல்ல பெயர் அடுத்து சினிமா நடிகன் என்ற பயணத்தையும் நல்லபடியா தொடங்கி வைக்கும் என நம்புகிறேன்.