போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை என்று கமல் பேசினார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை பரமக்குடியில் அவரது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கமலின் அண்ணன் சாருஹாசன், பிரபு, பூஜா குமார், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் கமலுடன் கலந்து கொண்டார்கள்.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
''என் பிறந்த நாளும், தந்தை சீனிவாசனின் இறந்த நாளும் ஒரே நாளாக இருப்பதில் காலத்தின் சுழற்சியும், வாழ்க்கையின் தன்மையும் பாடமாக உணர்த்தியுள்ளது. நான் பிறந்ததற்கான காரணம் என்னவென்று தெரியாது. எனக்காக தந்தை பல திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார். ஐஏஎஸ் படிக்க வேண்டிய மாணவனைப் போய் கலைஞனாக மாற்ற முயற்சிக்கிறீர்களே என்று என் குடும்பத்தினர் என் தந்தையிடம் கேட்டபோது, ''முதலில் கலைஞனாக ஆகட்டும், பிறகு ஐஏஎஸ்'' என்றார்.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் பண்ணிட்டு இருக்கும்போது, 'நீ இரவுக் கல்லூரியில் படித்து ஐஏஎஸ் எழுதினால் என்ன' என்று கேட்டார். ‘பாலசந்தர் ஒரு வழி போட்டுக் கொடுத்திருக்கார். அப்படியே போயிடுறேன். படிப்பெல்லாம் வராது’ என்றேன். உடனே, ‘கொஞ்சம் சங்கீதமாவது கற்றுக்கொள்’ என்றார். அவர் ஒரு கலா ரசிகர் என்பதற்கு என் குடும்பத்தினர் சான்று. அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தான் கலைத்துறைக்குச் சென்றேன்.
எங்களிடம் இருக்கும் நகைச்சுவை, கோபம் அனைத்துமே தந்தையிடமிருந்து கற்றதுதான். கமல்ஹாசன் என்ன படிச்சிருக்கார் என்றால், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. சில கலைகள் தெரியும். அதை வைத்துக்கொண்டு இந்த மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசான்கள் எல்லாம் தகப்பன்களாகவே மாறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. பாலசந்தர் சிலை என் அலுவலகத்தில் திறக்கப்படவுள்ளது. அதை நான் பார்த்து சந்தோஷப்படத்தான். இவை பூஜை செய்யப்பட வேண்டிய உருவங்கள் அல்ல. பின்பற்ற வேண்டிய உருவங்கள்.
என் குடும்பத்தில் யாருமே அரசியல் பக்கம் போவதை விரும்பவில்லை. ஒரே ஒரு மனிதர் மட்டும் தான், நான் அங்கு செல்ல வேண்டும் என்பதைப் பல காலம் சொல்லிக் கொண்டிருப்பார். நாங்கள் அதை உதாசினப்படுத்திவிடுவோம். இன்று அதுவும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. உங்கள் காலத்தில் சுதந்திரப் போராட்டம் இருந்தது. ஆகையால் சென்றீர்கள். இப்போது நான் ஏன் என்று தந்தையிடம் கேட்டேன். அப்போது அப்படியொரு போராட்டம் மறுபடியும் வந்தால் என்று கேள்வி கேட்டார். கிட்டத்தட்ட அப்படியொரு சூழல் தான் இன்று இருக்கிறது. நான் போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை''.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.