வி.ராம்ஜி
சினிமா என்பது கலை. அதேசமயம் சினிமா, தொழிலும் கூட. கலையோடு சேர்ந்த தொழிலை, கலையாக மட்டுமே கையாண்டாலும் தவறு. தொழிலாக மட்டுமே பார்த்தாலும் ஆரோக்கியமில்லை. இரண்டையும் சேர்த்துக் கொடுப்பதுதான் மிகப்பெரிய உத்தி. அதனால்தான், தன்னுடைய படத்துக்கு ’வர்த்தகமும் வித்தகமும் இணைந்து பெற்ற வெற்றி என்று விளம்பரப்படுத்தினார் அந்தக் கலைஞர். அவர்... கமல்ஹாசன்.
படிப்பாளிக் குடும்பம் அது. எல்லோரும் வக்கீல் உள்ளிட்ட பல படிப்புகளைக் கொண்டிருந்தார்கள். அவரின் அப்பா, போதாக்குறைக்கு சுதந்திரப் போராட்ட தியாகி. அந்த வீட்டிலிருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்த சிறுவன் கமல்... இப்படியொரு விஸ்வரூபத்தை எடுப்பார் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். பரமக்குடியில் பிறந்த கமல், ஆழ்வார்பேட்டை நாயகனானது ஆகப்பெரும் சாதனை.
சுற்றிக்கொண்டிருக்கும் பூமியை லோகோவாகக் கொண்ட புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்... பின்னாளில் உலகநாயகன் என்கிற அடைமொழியோடு வலம்வரப் போகும் நாயகனைத்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறோம் என்று நினைக்கவில்லை. ஏவிஎம் செட்டியாரைப் பொருத்தவரை, ஓர் குழந்தை நட்சத்திரம். ஆனால் அந்த நட்சத்திரம்... எழுபதுகளில் ஒளிரத்தொடங்கி, முழுநிலவென தகதகத்தது. எண்பதுகளில் தனக்கென ஓர் வானத்தையே உருவாக்கிக் கொண்டது.
‘களத்தூர் கண்ணம்மா’தான் அறிமுகம். ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடல் இன்றைக்கும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதே ஏவிஎம்மின் ‘பார்த்தால் பசி தீரும்’. முதலில் ஜெமினிகணேசனுடன். இப்போது சிவாஜி கணேசனுடன். அதுமட்டுமா? அந்தச் சின்ன வயதிலேயே டபுள் ஆக்ட் கொடுத்தார் கமல்.
எம்ஜிஆருடன் ‘ஆனந்த ஜோதி’, எஸ்.எஸ்.ஆருடன் ‘வானம்பாடி’ மீண்டும் ஜெமினியுடன் ‘பாதகாணிக்கை’ என வலம் வந்தார். தேவர் பிலிம்ஸின் ‘மாணவன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதற்குத்தான் இத்தனைக் காலம் காத்திருந்தோமா எனும் கேள்வி, அவருக்குள்!
கே.பாலசந்தரின் அறிமுகம். பிறகு அவர் ‘அரங்கேற்றம்’ செய்து வைத்தார். அடுத்தடுத்த வாய்ப்புகளும் வழங்கினார். பாரதிராஜா திரையுலகுக்கு வந்தபோது, கமலுடன் வந்தார். அவர் உருவாக்கிய ‘சப்பாணி’ கதாபாத்திரம்தான், தமிழ் சினிமாவையும் கமலின் கேரியரையும் பீடுநடை போடவைத்தது.
நண்பரும் இயக்குநருமான ஆர்.சி.சக்தியுடன் இணைந்து ‘உணர்ச்சிகள்’ மாதிரியான படமும் பண்ணினார். அதேகட்டத்தில் ‘சகலகலாவல்லவன்’ மாதிரியான படங்கள் ‘ராஜபார்வை’யையும் ‘விக்ரம்’ மாதிரியான படங்களையும் ‘ஹேராம்’ மாதிரியான படங்களையும் தருவதற்குபேருதவி புரிந்தது.
87-ம் ஆண்டு, மணிரத்னத்தின் ‘நாயகன்’, கமல்ஹாசனை வேறொரு களத்துக்கு இட்டுச் சென்றது. அந்தக் களத்துக்கு நாயகனாக்கியது. ‘சத்யா’, ‘குருதிப்புனல்’, ‘மகாநதி’, ‘தேவர்மகன்’, ‘அன்பே சிவம்’ என பல படங்களில், பல விதமான அரசியலையும் பேசினார். அந்த அரசியல் கோபங்கள்தான் இன்றைக்கு அவரை அரசியல்வாதியாக்கியிருக்கின்றன போலும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க... எப்போதும் பார்க்கலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதான படங்கள் கமலின் இன்னொரு ஸ்பெஷல் பக்கங்கள். அப்போதே வந்த ‘கல்யாணராமன்’ கலகலப்பான பேய்ப்படமாக வெரைட்டி காட்டியது. ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில், ‘எல்லாம் இன்ப மயம்’ படத்தில், கமல் ஏழெட்டு வேடங்கள் போட்டிருப்பார். வெளுத்திருப்பார்.
தமிழ் சினிமாவின் காலர் தூக்கும் படமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ பண்ணினார். காமெடி, காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் புகுந்து ரகளை பண்ணினார். சிதம்பர ரகசியத்தை விட, இன்றைக்கும் ரகசிய அதிசயம்... ‘குள்ள அப்பு’.
‘காதலா காதலா’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ என காமெடிப் பட்டாசுப் படங்கள் லிஸ்ட்... குடும்பத்துடன் உட்கார்ந்து வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். நம் கஷ்டங்களையெல்லாம் மறக்கவைக்கும்.
இன்றைக்கு கமலுக்கு 65 வயது.திரையுலகுக்கு வந்து 60 வருடங்கள். எப்படிப் பார்த்தாலும், கமல்ஹாசன், சிறந்த நடிகர். தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர். மிகச்சிறந்த எழுத்தாளர். பக்குவமான திரைக்கதையாளர். நேர்த்தியான இயக்குநர். இப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்.
கமலின் பிறந்தநாளில்... அந்த உன்னதக் கலைஞனை வாழ்த்துவோம்!