தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கும் சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக பதிவுத்துறை. இதனால் விஷால் தலைமையிலான அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தலைமையிலான அணியும், ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியில் இருக்கிறார்கள்.
இதனிடையே நடிகர் சங்கம் செயல்படவில்லை என அறிகிறோம். நாங்கள் ஏன் தனி அதிகாரி மூலமாக நிர்வகிக்கக் கூடாது என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் ஆகியோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இது தொடர்பான கடிதத்தையும் நடிகர் சங்கத்தின் நோட்டீஸ் போர்டிலும் ஒட்டியது.
இது நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நோட்டீஸ் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்ல ஆயத்தமாகி வந்தது தென்னிந்திய நடிகர் சங்கம். முன்பாக, இதே போல் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தனி அதிகாரியாக என்.சேகரை நியமித்து நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 7) பதிவுத்துறை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி. ஆக இருந்து வரும் கீதா சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டுள்ளார். இவர் காலையில் தன் உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த திடீர் அறிவிப்பின் மூலமாக தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தையும் தமிழக அரசு கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிகாரி கீதா நியமனம் தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் நடிகர் சங்கத்தின் வழக்கமான பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட எதுவுமே நடைபெறவில்லை. ஆகையால் சிறப்பு அதிகாரியாக கீதாவை நியமித்துள்ளோம். இனிமேல் அவரது மேற்பார்வையில் நடிகர் சங்கத்தின் பணிகள் நடக்கும்" என்று தெரிவித்துள்ளது.