தமிழ் சினிமா

இளையராஜாவை காணாத பிரசாத் ஸ்டுடியோ! - விட்டுக் கொடுக்காத நிர்வாகம்.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை?

செய்திப்பிரிவு

மகராசன் மோகன்

‘‘இசையை உயிராகவே நினைக்கும் இளைய ராஜா, 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமா பாடல் களால் ரசிகர்கள் மனதில் நிரம்பி இருப்பவர். நாம் கொண்டாடும் இசையை வழங்கிய இளையராஜா கொண் டாடும் இடம் என்றால், அது சென்னை - வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள அவரது இசைக்கூடம்தான்.

‘அன்னக்கிளி’ தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின் இசையை இளையராஜா பார்த்துப் பார்த்து கோர்த்தது இந்த இசைக்கூடத்தில்தான். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக அவரது கால் தடம் அந்த இடத்தில் படவில்லை. கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் வரும்17-ம் தேதி சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஒத்தி கையை வடபழனியில் வாகிணி ஸ்டுடியோ இருந்த இடத்துக்கு பின்புறம் உள்ள ‘தாமிரா’ ஸ்டுடியோவில் இளையராஜா நடத்தி வருகிறார்.

’’இளையராஜாவின் இசைக் கூடத்தால்தான் பிரசாத் ஸ்டுடி யோவுக்கே பெருமை. அவர் இங்கே வந்ததுக்குப் பிறகுதான் ஸ்டுடியோவுக்கும் பெரிய அளவில் வருமானமும் வரத் தொடங்கியது’’ என, எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத் இளைய ராஜாவை கொண்டாடிக் கொண்டிருந்தார். இதெல்லாம் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகம் அவர் பொறுப்பில் இருக்கும் வரைக்கும்தான். தற்போது அவர் தனது மகன் சாய் பிரசாத்திடம் ஸ்டுடியோ பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வெடுத்து வருகிறார்.

‘‘பிரசாத்தில் உள்ள தனது இசைக்கூடத்தை ஒரு கோயில் மாதிரியே நினைத்து பராமாரித்து வந்த இளையராஜா, எல்லா காலகட்டத்திலும் நிர்வாகத்துடன் இணக்கமாக இருந்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங் களையும் சரியாகவே செய்து வந்திருக்கிறார். தற்போது எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட எப்போதும் போலவே இளைய ராஜா செயல்பட்டிருக்கிறார்.

ஆனாலும், நிர்வாகத்தினரை கேட்காமல் இசைக்கூடத்தின் வடிவமைப்பை மாற்றுவது, இசை உபகரணங்களை மாற்றுவது என தனது சொந்த இடத்தைப் போல அவர் நிர்வகித்தது சாய் பிரசாத்துக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பாக இளையராஜா விடம் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத்தினர் முன்வந்தபோதும் அவர் பேச முன்வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதை யொட்டி இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக் கும் பனிப்போர் மூண்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இசைக்கூடம் இருந்த இடத்தில் வேறொரு கட்டிடம் கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறி, அந்த இடத்தை காலி செய்ய கால அவகாசம் அளித்துள்ளனர். இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து சரியான பதில் இல்லையாம். இதுதான் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய நிர்வாகத்துக்கு கோபம் அதிகரிக்க காரணம்’’ என்கின்றனர் இந்த ஸ்டுடியோவின் நிர்வாகப் பிரிவில் பணிபுரிவோர். இளையராஜாவை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என நேரடியாக அவரிடம் சொல்ல முடியாத சூழலில், அவர் இல்லாத நேரத்தில் ஸ்டுடியோவுக்குள் இருந்த அவரது இசைப் பொருட்களை வெளியில் எடுத்து வைத்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

காவல் துறையில் புகார்

இச்சூழலில்தான், ‘தனது இசை வேலைகளுக்கு இடையூறாக இருப்பதாக’ கூறி காவல் துறையினரிடம் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் தற்போது வழக்கு வரை நீண்டுள்ளது.‘‘இளையராஜா சென்டி மென்ட்டாககருதும் இடம் அது. அவர் தொடர்ந்து அங்கேயே இசையமைக்கட்டுமே. அவராகவே ஒதுங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம்!’’ என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியமானோர் வேண்டுகோளாகவே முன் வைத்துள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சைக்கோ’ படத்துக்கு இசைப் பணிகளை மேற்கொண்ட பிறகு இளையராஜா பிரசாத் இசைக்கூடத்துக்கு செல்லவே இல்லை.

இதையடுத்து இக்கால கட்டத்தில் இளையராஜாவின் இசைக்கூட வளாகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பிரசாத் நிர்வாகம் கொண்டு வந்துவிட்டது. இது குறித்து இப்போது வரையிலும் எதுவும் பேசாமல் மவுனமாகவே இருக்கிறார் இளையராஜா.

SCROLL FOR NEXT