தமிழ் சினிமா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்து: கஸ்தூரி விமர்சனம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. அதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, உரிய ஆவணங்களை உறவினர்களுக்கு அளிக்கவில்லை, ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது எனக் கூறி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

இந்த உத்தரவு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தமிழக அரசைக் கடுமையாகச் சாடினார்கள்.

தற்போது இது தொடர்பாக கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

''பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் இப்போது ஜாமீன் கிடைக்கும். ஏனென்றால் குண்டர் சட்டத்துக்கான ஆதாரம் எதையும் காவல் துறையால் ஒப்படைக்க முடியவில்லை.

வழக்கமாக மோசமான குற்றவாளிகள் மீதுதான் காவல் துறை குண்டர் சட்டத்தைப் போடும். அப்போதுதான் அவர்களை ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்ய முடியும் என்பதால். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரம் சேகரிக்க, குற்றவாளிகள் மீது கூடுதலாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு 8 மாதங்கள் அவகாசம் இருந்தது. இந்தியக் குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களுக்கு ஜாமீன் கிடையாது.

பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை எடுத்து புதிதாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால் அவர்களால் ஜாமீனை மறுக்கவோ குற்றவாளிகள் வெளியே வந்தவுடன் உடனடியாகக் கைது செய்யவோ முடியும். எனவே, இது காவல்துறையின் திறனைப் பொறுத்து அல்லது உடந்தையாக இருப்பதைப் பொறுத்துதான் நடக்கிறது''.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT