தமிழ் சினிமா

ரஜினியின் ’பொல்லாதவன்’... 39 வயது;  ஒரே வருடத்தில் நான்கு அதிரிபுதிரி ஹிட்டு! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


ரஜினிகாந்த் நடித்து, முக்தா சீனிவாசன் இயக்கிய ‘பொல்லாதவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 80-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு இப்போது 39 வயது. இந்த வருடத்தில், மூன்று மிகப்பெரிய வெற்றியைக் குவித்தார் ரஜினிகாந்த்.
1980-ம் ஆண்டு, ரஜினிகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக டேக் ஆஃப் ஆகிக்கொண்டிருந்த தருணம். அந்த வருடத்தின் தொடக்கம்... ரஜினிக்கு சூப்பர்டூப்பர் ஹிட்டில் இருந்துதான் களைகட்டியது.
நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, ஜனவரி 26-ம் தேதியன்று படத்தை ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார் என்பது பலருக்கும் தெரியும்தானே. குடியரசுத் தினமான ஜனவரி 26-ம் தேதி, பாலாஜியின் திருமணநாள். இந்தநாளில் படம் வெளியிடுவதை விரும்பினார் பாலாஜி.
1980-ம் ஆண்டு ஜனவரி 26 - ம் தேதி கே.பாலாஜியின் தயாரிப்பில், ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், ஸ்ரீப்ரியாவுடன் ரஜினி நடித்த ‘பில்லா’ படம் வெளியானது. ரஜினியின் வாழ்க்கையில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கமும் திருப்பமும் மிக முக்கியமானது. இந்தியில் அமிதாப் நடித்த ‘டான்’ எனும் படத்தின் ரீமேக்தான் ‘பில்லா’. ரீமேக் படங்களை எடுப்பதில் கில்லாடி எனப் பேரெடுத்த கே.பாலாஜியின் ‘பில்லா’ படத்தில் நடித்ததால் கிடைத்த வெற்றிச் சுவை, ரஜினிக்கு ரொம்பவே ருசித்தது. ரசித்தார்.


இதன் பின்னர், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், ‘அன்புக்கு நான் அடிமை’ திரைப்படம், ஜூன் 4-ம் தேதி ரிலீசானது. ரஜினி, ரதி, கராத்தே மணி, விஜயன், சுஜாதா முதலானோர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை. பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படமும் அதிரிபுதிரி ஹிட்டானது.


பிறகு, ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, மகேந்திரன் இயக்கத்தில், ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்த ‘ஜானி’ வெளியானது. இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், படமும் பாடல்களும் வித்யாசாகர் கேரக்டரும் ரொம்பவே ரசிக்கப்பட்டன; பேசப்பட்டன. இந்தப் படத்தின் பாடல்கள், இன்றைக்கும் இரவுப்பாடல்களாக செல்போனில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கின்றன.
இதையடுத்து, ஐ.வி.சசி இயக்கத்தில் ‘எல்லாம் உன் கைராசி’ என்ற படத்தில் நடித்தார் ரஜினி. இதற்கும் இளையராஜாதான் இசை. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பின்னர், நவம்பர் 6-ம் தேதி தீபாவளியன்று லட்சுமி, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன், டெல்லிகணேஷ் முதலானோர் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படம் வெளியானது. ஆறேழு வயது சிறுமிக்கு தந்தையாக நடித்திருந்தார் ரஜினி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. எல்லாப் பாடல்களுமே செம ஹிட்டடித்தது.


பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’, பாரதிராஜாவின் ‘நிழல்கள்’, பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ ஆகிய படங்கள் வந்திருந்தாலும், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படம்தான், வசூலில் முதலிடம் பிடித்தது. ‘நான் பொல்லாதவன்’பாடலையும் ‘அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்’ பாடலையும் எப்போதும் கேட்கலாம்; இப்போதும் கேட்கலாம்.
’பில்லா’, ‘பொல்லாதவன்’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, டிசம்பர் 20-ம் தேதி இன்னொரு பிரமாண்ட நிறுவனம்... இன்னொரு பிரமாண்டப் படம்... இன்னொரு பிரமாண்ட வெற்றி... ரஜினிக்குக் கிடைத்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘முரட்டுக்காளை’ வெளியானது. வெள்ளிவிழாப் படமானது. இளையராஜா இசையில், எல்லாப் பாடல்களுமே சூப்பார்ஹிட்டாகின.
ஆக, 80-ம் ஆண்டு ‘பில்லா’, ‘பொல்லாதவன்’, ‘முரட்டுக்காளை’ என மூன்று மெகா வெற்றிப் படங்கள் ரஜினிக்குக் கிடைத்தது.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ நவம்பர் 6-ம் தேதியன்று ரிலீசானது. இன்று ரிலீசான நாள். படம் வெளியாகி, 39 ஆண்டுகளாகின்றன.

SCROLL FOR NEXT