வி.ராம்ஜி
‘மூடுபனி’யின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலை மறக்கவே முடியாது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இளையராஜா இசையமைத்த 100வது படம்.
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான ‘மூடுபனி’, மறக்கவே முடியாத மிக முக்கியமான படங்களின் பட்டியலில் உள்ள படம். மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திரா, முதன்முதலில் இயக்கிய படம் ’கோகிலா’. இதுவொரு கன்னடப்படம். இந்தப் படத்தில் கமல்தான் ஹீரோ. ஷோபாவும் ரோஜாரமணியும் மோகனும் நடித்திருந்தார்கள்.
இதன் பிறகு தமிழில் பாலுமகேந்திராவுக்கு ‘அழியாத கோலங்கள்’தான் முதல் படம். மொத்தமாகப் பார்த்தால், இது இரண்டாவது படம். இந்தப் படத்திலும் ஷோபா நடித்திருந்தார். ’மூடுபனி’யில் பிரதாப் போத்தன், பானுசந்தர் நடித்திருந்தனர். மோகன் துணைக்கதாபாத்திரத்தில், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.
இந்தப் படத்தில்தான் பாலுமகேந்திரா, முதன் முதலாக இளையராஜாவுடன் இணைந்தார். ஏற்கெனவே ‘கோகிலா’ படத்தில் இணைய ஆசைப்பட்டார். அவரின் முதல் படத்தின் போதுதான் இளையராஜாவும் முதல் படமான ‘அன்னக்கிளி’ வந்தது. அப்போதே இளையராஜாவின் இசையில் கிறங்கிப் போனார் பாலுமகேந்திரா.
இதன் பிறகு 2-வது படமான ‘அழியாத கோலங்கள்’ படத்தில், இளையராஜாவுடன் இணைவதற்கு விரும்பினார். ஆனால் முடியவில்லை. இது பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. என்னால் எனக்குப் பிடித்தபடி இசையமைப்பாளரை போட்டுக்கொள்ளமுடியவில்லை’ என்கிறார் பாலுமகேந்திரா.
அதன் பிறகு, பாலுமகேந்திராவின் மூன்றாவது படம் ‘மூடுபனி’. இந்த முறை இளையராஜாவுடன் இணைந்தே தீருவது என உறுதியுடன் இருந்த பாலுமகேந்திரா , அதை செயல்படுத்தவும் செய்தார். இளையராஜாவும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சம்மதித்தார்.
இதிலொரு ஆச்சரியம்... இதை பாலுமகேந்திராவே சொல்லியிருக்கிறார்.
‘நான் முதல் படம் பண்ணும் போது இளையராஜாவும் முதல் படம் செய்துகொண்டிருந்தார். அடுத்து நான் மூன்றாவது படம் பண்ணும் போது இளையராஜா, நூறாவது படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். என்னுடைய ‘மூடுபனி’தான் இளையராஜாவுடனான என்னுடைய முதல்படம். அவருக்கு 100-வது படம். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி’ என்கிறார் பாலுமகேந்திரா.
எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவலை, மூலக்கதையாகக் கொண்டு, ‘மூடுபனி’ திரைக்கதையை உருவாக்கினார் பாலுமகேந்திரா. ஓர் த்ரில்லர் கதையை, சைக்கோ கில்லர் கதையை வெகு மிரட்டலுடன் படமாக்கியிருந்தார் பாலுமகேந்திர. படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். முக்கியமாக, ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல், இத்தனை வருடங்களாகியும் சூப்பர் ஹிட்டு. கிடார் இசையைக் குழைத்துக் கொடுத்திருப்பார் இளையராஜா. இன்றைக்கும் பலரின் காலர் டியூன்களாகவும் இரவுப் பயணங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு!
’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது!