தமிழ் சினிமா

'பாட்ஷா 2' படத்தை இயக்குவீர்களா? - இயக்குநர் அட்லி பதில்

செய்திப்பிரிவு

'பாட்ஷா 2' படத்தை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் அட்லி பதிலளித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் 1995-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ரிலீஸான படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன், விஜயகுமார், ஆனந்த் ராஜ், சரண் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் 'பாட்ஷா'. ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த படம் என எப்போதுமே விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழும். ஆனால் ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா இருவருமே ஒரே ஒரு ’பாட்ஷா’தான் என்று குறிப்பிடுவார்கள். தற்போது 'பாட்ஷா 2' படத்தை உங்களிடம் எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி இயக்குநர் அட்லியிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு “'பாட்ஷா 2' பண்ண வேண்டும் என்பது என் ஆசை. ஏனென்றால், அதுதான் சிறந்த ஆக்‌ஷன் படத்துக்கான களம். ரஜினி சார் எனும் போது, கதையொன்று இருக்கிறது. பார்ப்போம். தலைவர் ஓ.கே. சொல்லிவிட்டால் பண்ணிவிடலாம்” என்று பதிலளித்துள்ளார் அட்லி.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி.

SCROLL FOR NEXT