தமிழ் சினிமா

எந்தப் பெண் பிரசவத்துக்குப் பின் எடை இழப்பார்? சமீரா ரெட்டியின் உத்வேகப் பகிர்வு

செய்திப்பிரிவு

உடல்வாகு குறித்து கிண்டல் செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வாரணம் ஆயிரம்' திரைப்படம் இவரது நடிப்பில் பிரபலமானதாகும். தற்போது திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார் சமீரா ரெட்டி.

முதல் குழந்தை பிறந்தவுடன் மிகவும் குண்டானார் சமீரா ரெட்டி. அப்போது இணையத்தில் பலத்த கிண்டல்கள் எழுந்தன. உடனே உடம்பை ஸ்லிம்மாக்கி போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டார். அப்போது 2-வது முறையாக கர்ப்பமாகி, தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மிகவும் பிரபலமானது.

தற்போது 2 குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டதால், மீண்டும் தனது உடல்நிலையைப் பற்றிக் கிண்டல்கள் எழலாம் என நினைத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

அதில் அவர், "என் கடந்த காலத்திலிருந்து ! - அனைத்து மீம் க்ரியேட்டர்களுக்கும்...

அப்போது எல்லோரும் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணிக் கவலைப்படுவேன். பதின்ம வயதில் பார்க்க நன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிக (மன) அழுத்தத்தில் இருப்பேன். இன்று இரண்டு குழந்தைகளும், நான் எப்படி இருக்கிறேனோ அப்படி என்னை விரும்பும் கணவரும் இருந்தும், பல நேரங்களில் என் உடல் குறித்து நினைத்துப் பதட்டப்படுவேன், தத்தளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி.

இதனைத் தொடர்ந்து பலரும் எப்படி உடம்பைக் குறைக்கிறீர்கள் என்று அவரது பதிவுக்கு கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

அதில், "நான் எப்போது மீண்டும் பழையபடி (யம்மி மம்மி) மாறுவேன் என்று கேட்கின்றனர். எனக்கு யம்மி மம்மி என்றால் என்னவென்றே தெரியாது. எனக்கு அந்த வார்த்தையும் பிடிக்கவில்லை. சற்று களைப்பாக இருக்கிறேன், உடல் நலம் சரியில்லை. நான் தொடர்ந்து என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வருகிறேன். என் பழைய உடை எதுவும் எனக்குப் பொருந்தவில்லை.

எனது கணவரைத் தொடர்ந்து இதனால் நச்சரித்துக் கொண்டிருக்கிறேன். எந்தப் பெண் பிரசவத்துக்குப் பின் எடை இழப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் 4 கிலோ எடை அதிகரித்துள்ளேன். பிரசவத்துக்குப் பின் எடை குறைக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் தாய்ப்பால் தருகிறோம், அதில் சோர்வாகிறோம், சாப்பிடுகிறோம், சோர்வாகிறோம், எழுந்திருக்கவே முடியாமல் போகும். இந்தக் கொடூரமான சங்கிலி தொடரும்.

நிறைய அம்மாக்கள் என்னிடம் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் சமாளிக்கவே இல்லை. எனக்கு செய்ய விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஆனால் நான் செய்யப்போகிறேன். சில நேரங்களில் நாம் மோசமாக உணர்வோம், ஆனால் நாம் எழ வேண்டும். இது தினந்தோறும் நடக்கும் போராட்டம். ஒவ்வொரு நாளும் நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும். அவ்வளவுதான்." என்று பேசியுள்ளார் சமீரா ரெட்டி.

SCROLL FOR NEXT