தமிழ் சினிமா

80-ம் ஆண்டு தீபாவளியில் பாலசந்தர் - பாரதிராஜா; ‘வறுமையின் நிறம் சிகப்பு’ - ‘நிழல்கள்’ ஒரே சப்ஜெக்ட்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


80-ம் ஆண்டு தீபாவளியின் போது பாலசந்தர் படமும் பாரதிராஜாவின் படமும் வெளியாகின. அவர்களின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ திரைப்படமும் ‘நிழல்கள்’திரைப்படமும் கிட்டத்தட்ட வேலையில்லாப் பிரச்சினையை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தது.
1980-ம் ஆண்டு, நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வந்தது. அன்றைய தினம், ஒன்பது படங்கள் திரைக்கு வந்தன. அதாவது, அந்தத் தீபாவளிக்கு ஒன்பது படங்கள் ரிலீசாகின. சிவாஜிகணேசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் வெளியானது. இந்தப் படத்தை ஏ.சி.திருகோகசந்தர் இயக்கினார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இயக்குநர் துரை இயக்கத்தில் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்த ‘எங்கள் வாத்தியார்’ திரைப்படம் வெளியானது. அதேபோல், ’வாத்தியார்’ என்று பலராலும் அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் ஹீரோவாக நடித்த ‘பொற்காலம்’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தையும் துரை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை.
இந்த வருடத்தில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், ரஜினிகாந்த், லட்சுமி, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன் ஆகியோர் நடிப்பில் ‘பொல்லாதவன்’ திரைப்படம் வெளியானது. பாடல்கள் அனைத்தும் ஹிட்டு. படமும் ரஜினிக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.
இந்த இடத்தில், ஆச்சரியப் பதிவு ஒன்று. 1980-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’, ‘பொற்காலம்’, ‘பொல்லாதவன்’ ஆகிய தலைப்புகளில், பின்னாளில், சேரன் இயக்கி முரளி, மீனா நடித்த ‘பொற்காலம்’ வெளியானது. தனுஷ் நடித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ வெளியானது. கமல் தயாரித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ வெளியானது (இந்தப் பட வெளியீடு குறித்த மிகப்பெரிய சர்ச்சை மறக்கவே முடியாதது).
‘மன்மத ராகங்கள்’ என்றொரு படம் வெளியானது. அதேபோல், விஜய்பாபு நடித்த ‘மாதவி வந்தாள்’ திரைப்படமும் அன்றைய நாளில், தீபாவளிப் பண்டிகையன்று வெளியானது.
இயக்குநரும் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா இயக்கத்தில் ஷோபா, பிரதாப் போத்தன் நடித்த ‘மூடுபனி’ அன்றைய நாளில்தான் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்த வருடத்தில்தான், இயக்குநர் பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ வெளியானது. கமல், ஸ்ரீதேவி, எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தார்கள். அதேபோல், பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ திரைப்படமும் வெளியானது. சந்திரசேகர், ராஜசேகர், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
’வறுமையின் நிறம் சிகப்பு’ திரைப்படத்தின் கதைக்கருவும் ‘நிழல்கள்’ படத்தின் கதைக்கருவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பேசுகிற படங்களாக அமைந்தது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இரண்டும் ஒரேநாளில் ரிலீசானதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.
டெல்லியை கதைக்களமாக்கியிருப்பார் பாலசந்தர். சென்னையைக் களமாக்கியிருப்பார் பாரதிராஜா. படித்து பட்டதாரியாக இருந்தும் வேலை கிடைக்கவில்லை என்பதை பொட்டிலறைந்தாற் போல் சொல்லியிருப்பார் பாலசந்தர். பட்டதாரிக்கு வேலை கிடைக்காததைச் சொன்ன பாரதிராஜா, கூடவே திறமைக்கு வாய்ப்பு கிடைக்காததையும் சொல்லியிருப்பார்.
படம் முழுக்க சோகம், கோபம் இருந்தாலும் அவற்றைக் காமெடியின் மூலமாகவும் நக்கல் நையாண்டித்தனத்தோடும் தனக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார் பாலசந்தர். சோகத்தையும் கோபத்தையும் காதலையும் வருத்தம் தோய்ந்த தொனியில் கனமாக்கிக் காட்சிப்படுத்தியிருப்பார் பாரதிராஜா.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்திலும் காதல் உண்டு. ‘நிழல்கள்’ படத்திலும் காதலைச் சொல்லியிருப்பார். முன்னதில், காதல் கைகூடிவிடும். இதிலோ, காதல் சோகத்தில் ஆழ்த்திவிடும்.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் நடிகர்கள் எஸ்.வி.சேகரையும் திலீப்பையும் அறிமுகப்படுத்தியிருப்பார் பாலசந்தர். ‘நிழல்கள்’ படத்தில் ரவியையும் (நிழல்கள் ரவி), ஒளிப்பதிவாளர்களில் (ராபர்ட் - ராஜசேகரன்) ஒருவரான ராஜசேகரனையும் அறிமுகப்படுத்தியிருப்பார்.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கு எம்.எஸ்.வி. இசை. எல்லாப் பாடல்களுமே ஹிட்டு. ‘நிழல்கள்’ படத்துக்கு இளையராஜா இசை. எல்லாப் பாடல்களுமே ஹிட்டு. படம் வந்த பிறகு, எஸ்.வி.சேகர், திலீப் இருவருமே மிகப்பெரிய ரவுண்டு வந்தார்கள். அதேபோல், ரவி நிழல்கள் ரவியானார். இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், ராஜசேகரன் அப்போது தன் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து, ராபர்ட் - ராஜசேகரன் என்ற பெயரில், பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்கள். பின்னாளில், தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக வலம் வந்தார் (சமீபத்தில் காலமானார்).
’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் அமைந்த ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடல். ‘நிழல்கள்’ படத்தின் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ இன்றுவரை பலரின் காலர் டியூன்.
’நிழல்கள்’ படம் மூலமாக தமிழ்த் திரையுலகுக்கு இன்னும் இரண்டுபேர் கிடைத்தார்கள். அவர்களில் ஒருவர் தீபன் சக்ரவர்த்தி. ‘பூங்கதவே’ பாடலைப் பாடியதன் மூலம் அறிமுகமாகி, மிகப்பெரிய ரவுண்டு வந்த அற்புதப் பாடகர். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி, கவிஞர் எனும் அடையாளம் பெற்று, எண்ணற்ற பாடல்களின் மூலமாக கவியரசு, கவிப்பேரரசு என்றெல்லாம் இன்றைக்கும் அழைக்கப்படுகிறார். அவர்... வைரமுத்து!
அதுமட்டுமா? ‘நிழல்கள்’ படம் வெளியாகும் போது அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவை யாருக்கும் தெரியாது. பின்னர், இயக்குநராக அறிமுகமாகி, காமெடி கலந்த குணச்சித்திர, வில்லன் கேரக்டர்கள் என புகுந்து கலக்கினார். அவர்... இயக்குநர் மணிவண்ணன்.
ஆனாலும்... ‘வறுமையின் நிறம் சிகப்பு’ ஹிட்டடித்தது. ‘நிழல்கள்’ படம் தோல்வியைத் தழுவியது. சொல்லப்போனால், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த பாரதிராஜாவுக்குக் கிடைத்த முதல் தோல்வி... ‘நிழல்கள்’தான்!

SCROLL FOR NEXT