தமிழ் சினிமா

'பிகில் 2' எப்போது? கதைக்களம் என்ன? - அட்லி பதில்

செய்திப்பிரிவு

'பிகில் 2' கதை என்னவாக இருக்கும், எப்போது நடக்கும் என்பது குறித்து இயக்குநர் அட்லி பதிலளித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உலகளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது 'பிகில்'. 2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற பெயரையும் எடுத்துள்ளது. ஆனால், அந்தப் படத்தின் வியாபாரத்தன்மைக்கு இன்னும் அந்தப் படம் தமிழகத்தில் வசூல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

'பிகில்' படத்தில் ராயப்பன் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார் என்பது சொல்லப்படவில்லை. பலருக்குமே ராயப்பன் கதாபாத்திரத் தன்மைப் பிடித்திருந்தது. இந்நிலையில், 'பிகில்' படத்தின் 2-ம் பாகம் குறித்தும் ராயப்பன் கதாபாத்திரம் குறித்து பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் இயக்குநர் அட்லி. அதன் கேள்வியும், பதிலும் அப்படியே:

ராயப்பன் எப்படி உருவானார் என்பது வர வாய்ப்பு உள்ளதா?

கண்டிப்பாக. அதுமட்டுமல்லாது, மைக்கேல் கதாபாத்திரத்துக்கு ஏன் பிகில் என்று பெயர் வந்தது உள்ளிட்டவையும் இருக்கும். ராயப்பனுடைய பின்னணி என்ன, அவர் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார் என்பதும் இருக்கும். அதற்காகத் திட்டம் உள்ளது. பார்க்கலாம்.

உங்களது அடுத்தப் படம் 'பிகில் 2'?

தெரியல. வேறு ஏதாவது ஒரு படம் பண்ணுவோமே. 'பிகில் 2' பண்ண இன்னும் நேரம் உள்ளது.

இவ்வாறு அட்லி தெரிவித்துள்ளார்.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து ஷாரூக் கான் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT