நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் அவருக்காக அதிகப்படியான பாடல்கள் பாடியது எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான். இந்தத் தனிச்சிறப்பை ஒவ்வொரு வருடமும், கமலும் நானும் என்ற இசை நிகழ்ச்சியோடு எஸ்.பி.பி கொண்டாடி வருகிறார்.
நவம்பர் 1-ம் தேதி காமராஜர் அரங்கில் இந்த வருடத்துக்கான நிகழ்ச்சியை எஸ்.பி.பி நடத்தி முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் 9-வது ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கமல்ஹாசன் திரைத்துறையில் 60-வருடங்களை நிறைவு செய்துள்ள வருடம் என்பதால், நிகழ்ச்சி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.பி, "60 என்பது புதிய ஆரம்பத்தின் அறிகுறி. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. ஆனால் எனது தொலைபேசி அழைப்பை என் தம்பி (கமல்) எப்போதும் எடுக்காமல் விட்டதில்லை. ஒரு நல்ல பாடல் சிறந்த பாடலாக மாறுவதற்கு பாடகருக்கும் நடிகருக்கும் இடையேயான தொடர்பு சரியாக இருக்க வேண்டும். கமல்ஹாசனுக்கு நான் அதிக பாடல்கள் பாடியது எனது அதிர்ஷ்டம்" என்று சிலாகித்தார்.
கமல்ஹாசனுக்காக பாடிய 'புது மாப்பிள்ளைக்கு' பாடலில், அந்தப் பாடலின் கோரஸையும் தானே பாடியதாகத் தெரிவித்த எஸ்.பி.பி, கமல் தவிர வேறெந்த நடிகரும் 'அபூர்வ சகோதரர்கள்' போல ஒரு படத்தை எடுக்க முன்வந்திருக்க மாட்டார்கள் என்று பாராட்டினார். கமல்ஹாசன் நடிப்பில் மற்றுமொரு படமான 'அந்த ஒரு நிமிடம்' படத்தின் 'சிறிய பறவை சிறகை விரிக்க' பாடல் சிக்கலான மெட்டு என்றும், ஆனால் அந்தப் பாடலின் மொத்த இசையமைப்பை இளையராஜா அரை மணிநேரத்தில் முடித்தார் என்றும் எஸ்.பி.பி தன் நினைவுகளைப் பகிர்ந்தார்.
ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் உரை வீடியோ வடிவில் இடம்பெறும். ஆனால் இம்முறை நிகழ்ச்சிக்கு நேரடியாக வரச்சொல்லி கமலை எஸ்.பி.பி கேட்டிருக்கிறார்.
"நான் அவரிடம் பேசினேன். நவம்பர் 6 அல்லது 7 என்றால் வர முடியும் அண்ணா என்றார். ஏனென்றால் அவர் 'இந்தியன்' படப்பிடிப்பில் இருக்கிறார். சென்னையில் இல்லை என்பதால் அவரால் வர முடியவில்லை" என்று எஸ்.பி.பி விளக்கம் அளித்தார்.
- ஸ்ரீவத்சன் (தி இந்து, ஆங்கிலம்) | தமிழ் சுருக்கம்: கார்த்திக் கிருஷ்ணா