தமிழ் சினிமா

சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது': மத்திய அரசுக்கு இயக்குநர் விஜய்ஸ்ரீ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 'தாதா 87' இயக்குநர் விஜய்ஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதற்காகத் தமிழக அரசியல் தலைவர்கள் தொடங்கி திரையுலகப் பிரபலங்கள் என பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சாருஹாசன் நடிப்பில் வெளியான 'தாதா 87' படத்தின் இயக்குநர் விஜய்ஸ்ரீயும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சாருஹாசனுக்கும் மத்திய அரசு விருது அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விஜய்ஸ்ரீ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''1975-ல் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார்.நேற்று அவருக்கு ’வாழ்நாள் சாதனையாளர்’ விருதை மத்திய அரசு அறிவித்ததில் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் பாரத பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் அன்பான வேண்டுகோள், ’உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான சாருஹாசன் தனது முதுமையைக் காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய ’தபெரனா கதெ’ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

மேலும், சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது பெற்றுள்ளார். உலக அளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர்தான் நடித்து வருகிறார். இந்திய நடிகரின் இந்தச் சாதனையை உலகம் அறியச் செய்ய வேண்டும். சாருஹாசனுக்கு ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிட வேண்டும் என்பது என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்களின் அன்பான வேண்டுகோள்''.

இவ்வாறு 'தாதா 87' இயக்குநர் விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT