விநியோகஸ்தர், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இயக்குநராகவும் அறிமுகமாக முடிவு செய்துள்ளார்.
மொசர்பேயர் மற்றும் யுடிவி நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் தனஞ்ஜெயன். 'அபியும் நானும்', 'கண்டேன் காதலை', 'தெய்வத்திருமகள்', 'வேட்டை', 'கலகலப்பு', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'இவன் வேறமாதிரி', ’நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட பல படங்கள் இவரது மேற்பார்வையில்தான் தயாரிக்கப்பட்டன.
தற்போது புதிதாக 'கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ்' என்ற பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் 'மிஸ்டர் சந்திரமெளலி', 'காற்றின் மொழி' ஆகிய படங்களைத் தயாரித்தார். மேலும், 'கொலைகாரன்', 'யு டர்ன்', 'இவன் தந்திரன்' உள்ளிட்ட சில படங்களையும் விநியோகம் செய்துள்ளார். தொடர்ச்சியாக தமிழ் சினிமா சார்ந்து பல்வேறு விஷயங்களில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் தனஞ்ஜெயன். இது தொடர்பான அறிவிப்பை நேற்று (நவம்பர் 3) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவரது மனைவி லலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார் தனஞ்ஜெயன்.
இயக்குநர் ஆகும் முடிவு தொடர்பாக தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, "திடீர் முடிவெல்லாம் இல்லை. நீண்ட நாட்களாக இது தொடர்பாகப் பணிபுரிந்து வந்தேன். இப்போது முடியவில்லை என்றால், பின்பு எப்போதுமே முடியாது எனத் தோன்றியது. என் மனைவி லலிதாதான் ஊக்கமளித்து இப்போதே பண்ணுங்கள் என்று கூறினார். ஆகையால்தான் உடனே அறிவித்துள்ளேன்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது உள்ளிட்ட அனைத்துமே முடிவாகிவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். 2020-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்புத் தொடங்க ஆயத்தமாகி வருகிறோம்" என்று தெரிவித்தார் தனஞ்ஜெயன்.