'நரகாசூரன்' படத்தின் சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்திக் நரேன்.
’துருவங்கள் 16’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட, அதுகுறித்து ட்விட்டரில் புலம்பியிருந்தார் கார்த்திக் நரேன்.
இது தொடர்பாக ட்விட்டரில் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்ப, அதற்கு பெரிய விளக்கமென்றும் கொடுத்திருந்தார் கெளதம் மேனன். மேலும் கெளதம் மேனனின் பெயர் இல்லாமலேயே படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், பைனான்ஸ் சிக்கலால் இன்னும் 'நரகாசூரன்' வெளியாகாமல் இருக்கிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் தொடங்கிய 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, டிசம்பர் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது. இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 2) 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' ஆகிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சியிலிருந்தார் கெளதம் மேனன். இது தொடர்பான தனது மகிழ்ச்சியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அப்போது 'துருவ நட்சத்திரம்' தொடர்பாக "என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கலைவடிவமான இந்தப் படம் இல்லாமல் இந்த சீஸன் முடிந்து விடாது. விக்ரமுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம் . அடுத்த 60 நாட்களில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து 'துருவ நட்சத்திரம்' வெளியீட்டுக்குத் தயாராகும்" என்று ட்வீட் செய்திருந்தார் கெளதம் மேனன்.
அந்தப் பதிவுக்கு கார்த்திக் நரேன் "இது எப்போது பகலின் வெளிச்சத்தைப் பார்க்கும் என்ற தெளிவான விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும் சார். ஆம், இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுடன் 'நரகாசூரன்' படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.