கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்பது தொடர்பான பதிவால் சர்ச்சையானதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு மத்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமலுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்ற ரீதியில் கருத்துகளை வெளியிட்டார்கள்.
கமலுக்கு விருது கொடுக்காதது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். இந்தப் பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதனால் பலரும் அவரை சாடத் தொடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து தனது பதிவுக்கு விளக்கமொன்றை அளிக்கும் விதமாக, புதிதாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ரஜினிக்கு எதிரானவனோ. கமலுக்கு ஆதரவானவனோ அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவின் அடையாளம் என்கிற அடிப்படையில் வழங்கப்படும் விருது குறித்து மட்டுமே என் கருத்தைச் சொன்னேன்.
வசூல் மட்டுமே இந்த விருதுக்கான அளவீடாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மார்க்கெட் உருவானதன் பின்னணியில் நடிகர்கள் மட்டுமே காரணமில்லை, அப்படி ரசிக்கப்பட்ட படங்களின் இயக்குநர்களே முக்கிய காரணம்.
மத்திய அரசுக்கு இணக்கமாகவே ரஜினி கருத்துக்களை வெளியிட்டு வருவதும், தமிழக பாஜகவின் முகமாக ரஜினியைக் கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது.
சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களைத் தனது படங்களில் கொண்டுவந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே என் பார்வையில் ரஜினியை விடவும் கமல் திரைத்துறை அடையாளமாகத் தெரிகிறார் என்றேன். அதற்காக ரஜினி என்கிற தனி மனிதருக்கோ, நடிகருக்கோ நான் எதிரி என்கிற ரீதியில் சாயம் பூச வேண்டாம்.
ஒரு மாராட்டியர், கன்னடிகா எப்படி தமிழகத்தை ஆள்வது என்று சீமானும், பாரதிராஜாவும் ரஜினியை எதிர்த்து குரல் கொடுத்தபோது தனித்தனியாக இரண்டு நீண்ட பதிவுகள் போட்டு ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றவன் நான்.(முன் பதிவுகளைச் சென்று படித்துப் பார்க்கலாம்)
நான் ரஜினியின் முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, பாட்ஷா, அன்ணாமலை படங்களை இப்போதும் பல முறை விரும்பி எப்படிப் பார்க்கிறேனோ. அதே போலக் கமலின் பல திரைப்படங்களுக்கும் ரசிகன்.
காவிரிக்காக ஒட்டு மொத்த திரையுலகமே கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து நெய்வேலிக்குச் சென்று போராடப் புறப்பட்டுச் சென்றபோது தனி மனிதராக சேப்பாக்கத்தில் அடையாள உண்ணாவிரதமிருந்த ரஜினியை நேரில் மேடைக்குச் சென்று வாழ்த்தியவன் நான்.
கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுப்பது குறித்தும்..தேர்தல் பிரச்சாரத்தின் போது கோட்ஸே பற்றிப் பேசிய சர்ச்சையான கருத்துக்கும், சமீபத்தில் விகடன் பேட்டியில் தேவர் மகன் விவகாரத்தில் இளையராஜா, வாலிக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டபோதும், கமலை விமர்சித்துப் பதிவுகள் போட்டவன் நான்.
இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.