தமிழ் சினிமா

கமலுக்கு ‘சிகப்பு ரோஜாக்கள்’ - ரஜினிக்கு ‘தாய் மீது சத்தியம்’ - மேலும் கமலுக்கு 4 ; ரஜினிக்கு 2

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

1978ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ம் தேதி தீபாவளித் திருநாள் வந்தது. இந்தநாளில், பல சுவாரஸ்யமான படங்கள் வந்திருக்கின்றன.
சிவாஜிகணேசன் நடித்த ‘பைலட் பிரேம்நாத்’ திரைப்படம் தீபாவளியன்றுதான் வெளியானது. அதேபோல், கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய, ஜெய்சங்கர், ஜெயசித்ரா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ திரைப்படம் வெளியானது.
சிவாஜி நடித்த படம், இந்திய - இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்தது. கலைஞர் எழுதி வெளியான ‘வண்டிக்காரன் மகன்’ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அக்டோபர் 30ம் தேதி தீபாவளித் திருநாளில், கே.பாலசந்தரின் ‘தப்புத்தாளங்கள்’ வெளியானது. ரஜினி, சரிதா ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தில், கமல் கெளரவ வேடத்தில் ஒரேயொரு காட்சியில் வந்தார். படத்தின் கதையும் களமும் வெகுவாகப் பேசப்பட்டது. ஆனால் படம் பெரிதாகப் போகவில்லை.
இதேநாளில், கமலுடன் ரஜினி இணைந்து நடித்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படமும் வெளியானது. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் முதலானோர் நடித்திருந்த இந்தப் படம் இன்று வரை பேசப்படுகிற, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம். இளையராஜா இசையில், ருத்ரய்யா இயக்கிய இந்தப் படம், காலங்கள் கடந்தும் பேசிக்கொண்டே இருக்கும் படமாக அமைந்திருக்கிறது. பெண்ணீயத்துக்குக் குரல் கொடுக்கிற இந்தப் படம், எழுபதுகளிலேயே வந்திருப்பது ஆச்சரியம். ஆனால், ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட ‘அவள் அப்படித்தான்’ சரியாகப் போகவில்லை.
இதேநாளில், ஆர்.சி.சக்தி இயக்கத்தில், ஸ்ரீதேவிக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுத்து கமல் கெளரவ வேடத்தில் நடித்த ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படம் வெளியானது. இந்தப் படத்தில் கமலின் ஜோடி சத்தியப்ரியா. இந்தப் படமும் வெற்றியைப் பெறவில்லை.


தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த ‘தாய் மீது சத்தியம்’ அப்போதுதான் வெளியானது. அப்பாவையும் அம்மாவையும் பழிவாங்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதைதான். ஆனால், நாயையும் குதிரையையும் வைத்துக்கொண்டு, ரஜினிக்கு குடுமியையும் அப்பாவித்தனத்தையும் வைத்துக்கொண்டு கதை சொன்னதுதான் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டடித்தது இந்தப் படம். பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், கமல், ஸ்ரீதேவி நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ இந்தநாளில்தான் வெளியானது (1978, அக்டோபர் 28ம் தேதி). இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் ‘16 வயதினிலே’. அடுத்த படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இந்த இரண்டு படங்களும் கிராமத்து சப்ஜெக்ட். பாரதிராஜாவுக்கு இதுமாதிரிதான் படமெடுக்கத் தெரியும் போல என்றொரு பேச்சு பரவலாக பேசப்பட்டது. அந்த சமயத்தில்தான், கமல், ஸ்ரீதேவியை வைத்துக்கொண்டு, அட்டகாசமான சிட்டி ப்ளஸ் க்ரைம் த்ரில்லர், சைக்கோ த்ரில்லர் கதையைப் படமாக எடுத்தார் பாரதிராஜா.
கமலின் கதாபாத்திரத்தை, வேறு எவரும் நடித்திருக்கவே முடியாது என்றும் அந்தக் கேரக்டருக்கு புது ஸ்டைலீஷாக, பாதி உணர்வுகளை கண்களாலேயே கடத்தி மிரட்டியிருப்பார் கமல் என்றும் பத்திரிகைகள் விமர்சனத்தில் குறிப்பிட்டன. அதேபோல், பாக்யராஜின் வசனமும் படத்துக்குப் பக்கபலமாக அமைந்தன.
இளையராஜாவின் பின்னணி இசை, மிரட்டல். படத்தில் இரண்டுபாடல்கள். இரண்டுமே செம ஹிட்டு. இந்தப் படத்தில், நீண்ட காலத்துக்குப் பிறகு, கமல் சொந்தக்குரலில் பாடினார். ‘நினைவோ ஒரு பறவை’ எனும் பாடல் இன்று வரைக்கும் காலர் டியூன்களாக, ரிங்டோன்களாக இருக்கின்றன.
ஆக, 78ம் ஆண்டு தீபாவளிக்கு, ‘தப்புத்தாளங்கள்’, மனிதரில் இத்தனை நிறங்களா?’, ‘அவள் அப்படித்தான்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என கமல் நடித்த நான்கு படங்கள் வெளியாகின. ’தப்புத்தாளங்கள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘தாய் மீது சத்தியம்’ என இரண்டு படங்கள் ரஜினிக்கு வெளியாகின. இவற்றில் கமலுக்கு ‘சிகப்பு ரோஜாக்கள்’, ரஜினிக்கு ‘தாய் மீது சத்தியம்’ என வெற்றியைத் தந்தன.
அவ்வளவு ஏன்... இந்தத் தீபாவளிக்குத்தான் நாகேஷ் நாயகனாக ‘அதிர்ஷ்டக்காரன்’ திரைப்படமும் வெளியானது. ஆனால், படத்துக்கு அதிர்ஷ்டமில்லாமல் போய்விட்டது.

SCROLL FOR NEXT