ஜெயம் ரவி நடித்து வரும் 'பூமி' படத்தில் வந்தே மாதரம் பாடலுக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளார் இமான். படத்தின் இறுதிக்காட்சியில் இதை உபயோகப்படுத்தியுள்ளது படக்குழு.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படம் 'பூமி'. அவரது 25-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 1) வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கி வருகிறார். இதில் ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. கிராமத்தில் இருக்கும் பிரச்சினை ஒன்றைத் தீர்க்க அவர் என்ன செய்கிறார் என்பதே கதை.
முழுக்க விவசாயத்தைப் பற்றிய படமாக இருந்தாலும், முன்பு விவசாயம் சார்ந்து வெளியான எந்தவொரு படத்தின் சாயலும் இதில் இல்லாதவாறு பார்த்துக் கொண்டுள்ளது படக்குழு. மேலும், இந்தப் படத்துக்காக 'வந்தே மாதரம்' பாடலை புதிய வடிவில் உருவாக்கியுள்ளார் இமான். இதனைப் படத்தின் கிளைமாக்ஸில் வருவது போல் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.
இதில் நாயகியாக நிதி அகர்வால், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைப்பாளராகவும், டெட்லி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.