தமிழ் சினிமா

புதிய யுகத்துக்கான படமாக்கல் 'கைதி': மகேஷ் பாபு புகழாரம்

செய்திப்பிரிவு

'கைதி' புதிய யுகத்துக்கான படமாக்கல் என்று தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், தினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கைதி'.

விஜய் 'பிகில்' படத்துக்குப் போட்டியாக அக்டோபர் 25-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. பாடல்கள் இல்லை, நாயகி இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற வித்தியாசமான களத்துடன் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் அனைவருமே லாபத்தை அடைந்துள்ளனர். பல்வேறு ஊர்களில் இரண்டாம் வாரத்தில் 'பிகில்' படத்தின் வசூலைத் தாண்டியுள்ளது 'கைதி' என்பது நினைவு கூரத்தக்கது.

பலதரப்பட்ட திரையுலகினரும் பாராட்டி வரும் வேளையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் படத்தைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "'கைதி' புதிய யுகத்துக்கான படமாக்கல்... விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளும், அற்புதமான நடிப்பும் கொண்ட சுவாரஸ்யமான கதை. பாடல்கள் இல்லை.

வரவேற்கத் தகுந்த மாற்றம். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

இந்த ட்வீட்டால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. 'அசுரன்' படத்துக்கு இதே போல் பாராட்டி மகேஷ் பாபு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேறு மொழிப் படமாக இருந்தாலும், மகேஷ் பாபு தொடர்ச்சியாக நல்ல படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது நல்ல விஷயம் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT