தமிழ் சினிமா

மம்மூட்டி, ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள ‘குபேரன்’

செய்திப்பிரிவு

மம்மூட்டி, ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘குபேரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டி நடிப்பில் ‘ராஜாதி ராஜா’ மற்றும் ‘மாஸ்டர் பீஸ்’ என இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவர் அஜய் வாசுதேவ். இவர் மூன்றாவது முறையாக மம்மூட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டியை வைத்து மூன்றாவதாகப் படம் இயக்கும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, தமிழில் ‘குபேரன்’ என்றும், மலையாளத்தில் ‘ஷைலாக்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜோபி ஜார்ஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

மம்மூட்டியுடன் இணைந்து ராஜ்கிரண் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதுதான் அவர் நடித்துள்ள முதல் மலையாளப் படமாகும். அத்துடன், மீனாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘என் ராசாவின் மனசிலே’, ‘பாசமுள்ள பாண்டியரே’ படங்களுக்குப் பிறகு 28 வருடங்கள் கழித்து ராஜ்கிரண் - மீனா இணைந்து நடித்துள்ளனர். கலாபவன் ஷாஜன் வில்லனாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் சித்திக் நடித்துள்ளார்.

பிபின் மோகன், அனீஸ் ஹமீது இருவரும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, ரணதீவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்கிரண், விவேகா இருவரும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். இதன்மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார் ராஜ்கிரண்.

வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தின் தமிழ் உரிமையை, ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட்ஸ் க்ரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT