விஜே தணிகை ஹீரோவாக நடிக்கும் படத்தை, நியூட்டன் பிரபு இயக்குகிறார்.
கலைஞர் மற்றும் இசையருவி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருபவர் தணிகை. அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அறிவழகன் இயக்கிய இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து ‘தொடுப்பி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் தணிகை. தேஸ்வின் பிரேம் இயக்கியுள்ள இந்தப்படம், மெடிக்கல் க்ரைமை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சோல் ஆஃப் சவுத்’ என்ற இசைக்குழு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, அன்சர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். விரைவில் இதை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் நியூட்டன் பிரபு இயக்கவுள்ள படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார் தணிகை. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை, அணி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்றது.
பெங்களூரைச் சேர்ந்த மாடலான குயின்ஸ்லி, இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். விஜய் டிவி பாண்டி கமல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சம்சத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சித்தார்த்தா பிரதீப் இசையமைக்கிறார்.
சைக்கோ த்ரில்லர் வகையைச் சார்ந்த இதன் படப்பிடிப்பு, விரைவில் தொடங்கவுள்ளது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதுதவிர, இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துவரும் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தணிகை.