தமிழ் சினிமா

சூர்யா, கார்த்தி படங்கள் ஒரே நாளில் வெளியீடு?

செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ் விடுமுறையில் சூர்யா, கார்த்தி இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

‘காப்பான்’ படத்தைத் தொடர்ந்து ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார் குனீத் மோங்கா. வருகிற 10-ம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வருகிற டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்தையும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். ஜோதிகா - கார்த்தி இருவரும் அக்கா - தம்பியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இவர்களுடைய அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டுமே முழுக்க முழுக்கப் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால், உடனடியாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், சூர்யாவின் படத்தோடு கார்த்தி படத்தையும் வெளியிடுவார்களா? இந்த இரண்டு படங்களில், ஏதாவது ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்குமா? என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT