தமிழகத்தில் 'பிகில்' படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து, மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. அக்டோபர் 25-ம் தேதி தீபாவளி விடுமுறைக்கு வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்தப் படத்துடன் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் வெளியான அக்ஷய் குமார் நடித்த 'ஹவுஸ் ஃபுல் 4' படத்தின் வசூலைப் பல நாடுகளிலும் ‘பிகில்’ முறியடித்தது. இதனைப் பிரபல வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், உலகளவில் மொத்த வசூலில் 200 கோடி ரூபாயைத் தாண்டியது.
தற்போது தமிழகத்தில் மட்டும் மொத்த வசூலில் சுமார் 100 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து, தமிழக உரிமையை மட்டும் 83 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 140 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், விமர்சனங்களைப் பொருட்படுத்தாது தமிழகத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருப்பதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இன்னும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே, தமிழகத்தில் 'பிகில்' லாபகரமான படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, அஜித் நடித்த படங்கள் 100 கோடியைத் தாண்ட 3 வாரங்கள் வரை எடுத்துக் கொண்டன. ஆனால், 'பிகில்' படமோ ஒரே வாரத்தில் அதைத் தாண்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.