வி.ராம்ஜி
சிவாஜியின் ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் ரிலீசான நாள். இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சிவாஜி நடித்த எத்தனையோ படங்கள் நம் மனதில் இன்றைக்கும் இடம்பிடித்திருக்கின்றன. இதில் சிவாஜி, இயக்குநர் ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் தனி ரகம். இதில் ‘பா’ வரிசைப் படங்கள் என்பது மிகப் பிரபலம்.
‘பாசமலர்’, ‘பாலும்பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’ என பல படங்களை இன்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில், சிவாஜி, ஏ.பீம்சிங் கூட்டணியில் மிகப் பெரிய வெற்றியைத் தந்த படம் ‘பாகப்பிரிவினை’.
அந்த வருடத்தில், ‘அவள் யார்?’ என்றொரு படத்தில் நடித்தார் சிவாஜி. பத்மினியுடன் ‘தங்கப்பதுமை’ என்ற படத்தில் நடித்தார். படமும் பாடல்களும் பற்றிக் கொண்டது. ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அதையடுத்து, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், வண்ணப்படமாக வந்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இந்தப் படத்தின் வெற்றியை சாதாரணமாகச் சொல்லமுடியாது.
இதே வருடத்தில், ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.பீம்சிங் இயக்கத்தில், சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவானது ‘பாகப்பிரிவினை’.
சிவாஜிகணேசன், சரோஜாதேவி, பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.
சிறுவயதில், மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும் சிறுவன் கன்னையாவிற்கு. பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார். பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியப்பாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதா என அடுத்தகட்டம்தான் வாழ்க்கைப் பாடம். படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது.
இந்தப் படத்தின் வெற்றியில் சரோஜாதேவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ பிரமாண்ட வெற்றியை அடைந்திருந்தது. செப்டம்பர் மாதத்திலும் ஹவுஸ்புல். அக்டோபர் மாதமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது. சரோஜாதேவி நடித்த படம் என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். அதேபோல், சரோஜாதேவிக்கு இந்தப் படம் இன்னும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள். அற்புதமான இசையையும் பாடல்களையும் வழங்கியிருந்தார்கள். எம்.எஸ்.சோலைமலை கதை, வசனத்தை எழுதியிருந்தார். இயல்பான கதை, அழுத்தமான, பாந்தமான வசனங்கள்.
படத்துக்கு பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். அப்போது அந்த சமயத்தில் சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் என்பார்கள். சிவாஜி படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதவில்லை என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் பீம்சிங்கிடம், ‘கதையில் இந்த இடத்தில் வருகிற பாடலை கவிஞரைத் தவிர (கண்ணதாசன்) யாருமே எழுதமுடியாது’ என்று சொல்ல... ஒருவழியாக, சமரசமானார்கள் சிவாஜியும் கண்ணதாசனும். அப்படி பட்டுகோட்டை கல்யாணசுந்தரமே கண்ணதாசன் எழுதினாத்தான் சரியாக இருக்கும் என்று சொன்ன அந்தப் பாட்டு... ‘ஏன் பிறந்தாய் மகனே...’ பாட்டு!
இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டு. ‘பிள்ளையாரு கோயிலுக்கு’ என்றொரு பாடல். ‘தேரோடும் எங்க சீரான மதுரையில’ என்றொரு பாடல். ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து...’ என்றொரு பாடல், ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே...’, என்றொரு பாடல். ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ என்ற பாடல். ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...’ என்ற பாடல் என அனைத்துமே நம் மனதில் இன்றைக்கும் உறவாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் போட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல். சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’
1959ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியானது ‘பாகப்பிரிவினை’. படம் வெளியாகி, இன்றுடன் 60 ஆண்டுகளாகிறது. இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்களுக்கும் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குமான பந்தத்தைப் பிரிக்கவே முடியாது.