கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள 'கைதி' படத்தின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25-ம் தேதி 'பிகில்' படத்துக்குப் போட்டியாக வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை போன்ற வித்தியாசமான அம்சங்களுடன் இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ஆனால், இந்தப் படத்தை மும்பையிலுள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
கன்னடத்தில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், இந்தியைப் போலவே கன்னடத்திலும் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இரண்டு ரீமேக்கையும் யார் இயக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுவிட்டதால், இரண்டு ரீமேக்கும் சாத்தியமில்லை என்பது நினைவு கூரத்தக்கது. 'கைதி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தற்போது அதன் 2-ம் பாகத்தில் மீண்டும் கார்த்தி - லோகேஷ் கனகராஜ் இணைவது உறுதியாகியுள்ளது.