அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது ‘பிகில்’.
விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா, யோகி பாபு, விவேக், அம்ரிதா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதினார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்தார்.
இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியில் குறை வைக்காமல் சாதனை படைத்து வருகிறது ‘பிகில்’.
தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘பிகில்’, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரிலீஸானது. தமிழகத்தைப் போலவே மற்ற இடங்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது ‘பிகில்’. அமெரிக்காவில் இதுவரை 4 தமிழ்ப் படங்கள் மட்டுமே 1 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்துள்ளன. அதில், ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து ‘பிகில்’ படமும் இணைந்துள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள இன்னொரு படம், ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’. விஜய் நடித்த படங்கள் 1 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தாலும், ரஜினியின் சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலக அளவில் 175 கோடி ரூபாய் வசூலித்துள்ள ‘பிகில்’, வருகிற வார இறுதியில் 200 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.