தளபதி விஜய் உச்சநிலையில் இருக்கிறார். இந்த ஆட்டத்தின் மாஸ்டர் என்பதை அட்லி நிரூபிக்கிறார். சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. சுமார் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.
4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.70 கோடியைத் தாண்டிவிட்டது 'பிகில்’ வசூல். இதனால், 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது 'பிகில்'. உலக அளவில் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் தான் நடித்த 'தெறி' படத்தின் மொத்த வசூலை, தனது 'பிகில்' படத்தின் 4 நாட்கள் மொத்த வசூல் மூலமாகத் தாண்டியுள்ளார் விஜய்.
இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் 'பிகில்' படம் பார்த்துள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், '' 'பிகில்' முழுமையான திருவிழா போன்றதொரு மகிழ்ச்சி. உணர்ச்சிகளின் ரோலர் கோஸ்டர். தளபதி விஜய் உச்சநிலையில் இருக்கிறார். படம் முழுக்க நம்மை விசில் அடிக்க வைக்கிறார். அவர் திறமைசாலி. இந்த ஆட்டத்தின் மாஸ்டர் என்பதை அட்லி நிரூபிக்கிறார். சூப்பர் ஸ்டார் இயக்குநர்'' என்று கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.