தமிழ் சினிமா

4 நாட்களில் ரூ.150 கோடியை கடந்தது பிகில்: புதிய சாதனை படைத்தது

செய்திப்பிரிவு

உலகளவில் 4 நாட்களில் மொத்த வசூலில் 150 கோடியைக் கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது 'பிகில்' திரைப்படம்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. சுமார் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.

உலகளவில் 3 நாட்களில் மொத்த வசூலில் 100 கோடியைத் தாண்டியது 'பிகில்'. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. அதே போல், 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 70 கோடியைத் தாண்டிவிட்டது வசூல். இதனால், 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் 3 இடத்தைப் பிடித்துள்ளது 'பிகில்'. 4 நாட்கள் வசூலில் 3-ம் இடத்தைப் பிடித்திருப்பதை மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அதுமட்டுமன்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. உலகளவில் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் தான் நடித்த 'தெறி' படத்தின் மொத்த வசூலை, தனது 'பிகில்' படத்தின் 4 நாட்கள் மொத்த வசூல் மூலமாகத் தாண்டியுள்ளார் விஜய்.

மேலும், இந்தியளவில் கடந்த வாரம் வெளியான படங்களில் முதல் படமாக 'பிகில்' இடம்பெற்றுள்ளது. இந்தியில் அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான 'ஹவுஸ் ஃபுல் 4' படத்தின் வசூலைப் பல வெளிநாடுகளில் தாண்டியுள்ளது 'பிகில்' வசூல். இந்தப் படத்தின் வசூல் மூலமாக ரஜினிக்குப் பிறகு உலகளவில் வசூல் நிறைந்த நடிகர் பட்டியலில் தமிழ் திரையுலகிலிருந்து விஜய்யும் இணைந்துள்ளார் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிவடைந்து, இன்று (அக்டோபர் 29) முதல் வேலை நாள். ஆகவே, வசூல் குறையுமா அல்லது இதே வசூல் நிலை நீடித்து சாதனை படைக்குமா என்பது விரைவில் தெரியவரும். 'பிகில்' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த வாரம் எந்தவொரு புதிய தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT