ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார் என்று சுஜித் மறைவு தொடர்பாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
குழியில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்படாமலே மரணத்தைத் தழுவினார். அரசின் அத்தனை எந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு 82 மணி நேர முயற்சி வீணானது. அனைத்து பிரார்த்தனைகளும் பலனளிக்காமல் சுஜித் மீட்கப்படாமலே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்குத் தமிழக அமைச்சர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வரப் பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள். தற்போது சுஜித்தின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுஜித் மறைவு தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது”
அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர். வந்த மழையும், இனி எந்த மழையும் அந்த தாயில் கண்ணீர் கரையைக் கழுவ இயலுமா.. அடேய் சுர்ஜித்.. இத்தனை அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலே எழும்பி இருக்கலாம். ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுக வைத்து விட்டரே..
உன்னை மீட்கக் கையில் கயிறு கட்டிப் பார்த்தோம். ஆனால், உன் கால் விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டிப் பிறந்த குழந்தைக்கு, முன் கூட்டியே சவக்குழி வெட்டியவன். உலகத்தின் நீளமான சவக்குழி இது தானோ என்னவோ, நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது.
மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய்.. மடமை சமூகமே.. வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில், மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே. அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள், அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்கு அத்தனை கண்ணீரையும் துடைத்துவிடு.
ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள். யாரும் எழுந்து கொள்ள வேண்டாம். ஜன கன மண..
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.