உன் உடலை எடுத்து விட்டோம்; துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம் என்று சுஜித் மரணம் தொடர்பாக விவேக் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
குழியில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்படாமலே மரணத்தைத் தழுவினார். அரசின் அத்தனை எந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு 82 மணி நேர முயற்சி வீணானது. அனைத்து பிரார்த்தனைகளும் பலனளிக்காமல் சுஜித் மீட்கப்படாமலே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்குத் தமிழக அமைச்சர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள். தற்போது சுஜித்தின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுஜித் மறைவு தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் “கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்துக் களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?” என்று தெரிவித்துள்ளார்