ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சுஜித் மீட்கப்படும் இடத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நடிகர் விமல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு வயதேயான சுஜித், 88 அடி ஆழத்தில் சிக்கித் தவித்து வருகிறார்.
10-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முயற்சி செய்தும், இன்னும் சுஜித்தை மீட்க முடியவில்லை. எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்தையும் தாண்டி பலரும் சுஜித்துக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய அனுதாபங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அமைச்சர் விஜய பாஸ்கர், கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை.
இந்நிலையில், நடிகர் விமல் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், அமைச்சர் விஜய பாஸ்கரிடம் தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
"எங்கள் ஊரில் தீபாவளியைக் கொண்டாடவில்லை, குழந்தை சுஜித் மீண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோரது பிரார்த்தனையாகவும் உள்ளது.
கண்டிப்பாக, அதற்கான முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் தூங்காமல் இரவுபகலாக போராடி வருகின்றனர். கண்டிப்பாக இந்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என நேற்று (அக். 27) தனியார் தொலைக்காட்சிக்கு விமல் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
88 அடி ஆழத்தில் உள்ள சுஜித்தை, போர்வெல் மூலம் 110 அடி ஆழம் வரை தோண்டி மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது (மதியம் 3.15 நிலவரப்படி) 20 அடி ஆழத்துக்கு 4 துளைகள் போடப்பட்டுள்ளன.